Friday, March 11, 2016

தினம் ஒரு பாசுரம் - 71

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு என்று,

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்,

மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே,

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


---திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இன்று திருவேங்கட த்ரிவிக்ரமப் பாசுரம் ஒன்று. பொருட்சுவையில் அலாதியான ஒன்றும் கூடபொழிப்புரை:

எந்நாளே நாம் - எப்போது நாம்

மண்ணளந்த - இந்த பூவுலகை, ( அந்த விண்ணுலகையும் தாவி ) அளந்த

இணைத்தாமரைகள் - (திருமாலின்) இரு திருவடிகளையும்

காண்பதற்கு என்று - காண்பதற்குரிய நாள் (எப்போது  அமையும்) என

எந்நாளும் நின்று - ஒரு நாளும் விடாமல், நின்ற வண்ணம்

இனம் இனமாய் - பெருங்கூட்டமாய்

இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி - வானவர்கள் துதி செய்து, பரம பக்தியுடன் தொழுது

மெய்ந் நா மனத்தால் -  உடல், நா, உள்ளம் என்ற மூன்றையும் கொண்டு

வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே - ஆராதிக்கும் திருமலையில் எழுந்தருளியுள்ள கோவிந்தனே

மெய்ந் நான் எய்தி   - மெய் நிலையை நான் அடைந்து

எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? -  உன் திருவடிக் கீழ் அடியவனான நான் சேர்ந்து அமையும் நாள் என்றைக்கோ?

பாசுரக்குறிப்புகள்:

திருவாய்மொழிப் பாசுரங்கள் அந்தாதி வகையைச் சேர்ந்தவை. அதாவது, ஒரு பாசுரத்தின் கடைச்சொல் கொண்டு அடுத்த பாசுரம் தொடங்கும். அந்த வகையில், இப்பாசுரத்திற்கு முந்தையதில் ஆழ்வார் "திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?" (தினம் ஒரு பாசுரம்-68 இடுகை) என்று உய்வடையும் நாள் பற்றிய ஐயத்தை எழுப்பியிருந்தார். இப்பாசுரத்திலும், "எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?"  என்று சந்தேகப்படினும் "மெய்ந் நான் எய்தி" என்று பரமபதத்திற்குத் தேவையான  தகுதியைத் தான் பெற அருளவேணுமாய் வேண்டிய பின்னரே திருவடி நிழல் தஞ்சம் புகுவது பற்றிச் சொல்கிறார், இல்லையா?

 


 மண்ணளந்த இணைத்தாமரைகள்

ஆழ்வார்கள்  வாமன அவதாரத்தை  மிக்க ஏற்றமாய் பாசுரங்களில் பாடியதற்கு, அதன் திருவடி உகந்த சம்பந்தமே காரணம் எனலாம்.  ராமானுஜரும் தனது "சரணாகதி கத்யத்தில்" "லோகவிக்ராந்த சரணௌ சரணம்தே வ்ரஜம் விபோ (உலகமளந்த உன் திருவடிகளை உபாயமெனப் பற்றுவேன்)" என்ற  வடமொழிப் புராண தோத்திரத்தைச் சுட்டி  த்ரிவிக்ரமனின் திருவடிகளையே முன்னிறுத்துகிறார். இன்னும் பல எடுத்துக்காட்டுகள் தரலாம்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழி -
"குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன"

"திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே"

"மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு, நீலக் கரு நிற மேக நியாயற்கு, கோலச் செந்தாமரைக் கண்ணற்கு "

"மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே"

"ஓரடியால் எல்லா உலகும் தட வந்த மாயோன்"

"ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே"

"தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ"

"ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை" (கள்ளழகர்  மங்களாசாசனம்)

ஆண்டாளின் திருப்பாவை -
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி"

"அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே"

"அன்று  இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி"

திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தம் -
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே

திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழி -
மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஏன் தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்

மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது  நம்மையாளும் அரசே

திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்
"ஆரால் இவ்வையம் அடி அளப்புண்டது தான்"

"பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை" 


 
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்- திருவேங்கடமுடையானின்  திருவடிகள் தேவர்களுக்கும் அரிதான செங்கமலத் திருவடிகள் என்று ஆழ்வார் அருளுகிறார். வானவர்களே, நிரந்தரமாக, திரள் திரளாக, அவனது திருவடிகளை தரிசிப்பதற்காக, பணிவன்புடன்  நின்று  தொழுகின்றனர் எனும்போது, மானுடர்க்கு வேறு புகழ் இல்லை என ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார். இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம்.   அதாவது, மானுட அடியார்களுக்கு (அர்ச்சாவதார) திருமலை உறை அண்ணலின் திருவடிகள், வானுலக மாந்தர் வணங்கும் பரமபத நாயகனின் திருவடித் தாமரைகளுக்கு ஒப்பானவை!

மெய்ந் நா மனத்தால் வழிபாடு - மனம், வாக்கு, காயம் என்று த்ரிகரணங்களாலும் வழிபடுதல் வேண்டும் என்பது ஆழ்வார் வாக்கு. அதுவே சரணாகதித்துவக் கோட்பாடு.  ஆழ்வார் "எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி" எனப் பாடி  இம்மூன்றுக்கும் பொருத்தமாக  3 வினைகளை (முறையே) அருமையாகக் கையாள்கிறார்.
மெய் --- நின்று
நா --- ஏத்தி
மனத்தால் --- இறைஞ்சி


அதனால் தான் "மனம் வாக்கு காயம்" பாசுரத்தில் "காயம் வாக்கு மனம்" என மாறி வருகிறது.  மெய் என்பது   உடலின் செயல்களைக் குறிக்கிறது: பணிதல், நோன்பிருத்தல் போன்றவை.   காயம் (உடல்) முதலில் வசப்பட வேண்டும் (ஐம்புலனடக்கம்) என்பதால் மெய் முதலில் சொல்லப்பட்டது என்று கொள்வதும் தகும். "மெய்யான  நம்பிக்கையுடன், பற்றுதலுடன், நாவினாலும், மனத்தினாலும் வழிபாடு செய்தல் வேண்டும்" என்றும் கொள்ளலாம்.

ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம் ஒன்றில் "தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" என்று  இம்மூன்றையும் நம்மாழ்வார் சொன்ன வரிசையிலேயே தான் பாடியிருக்கிறாள்.

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? - ஆழ்வார் " பரமனே! அடியேன் உண்மையைக் கண்டு கொண்டேன் . (ஆனால்)அதை முழுமையாக புரிந்து தெளியவல்ல அறிவை நீவிர் அருளி ஆட்கொள்ள வேண்டும்" என்று தன்னைக்  குறைத்து எண்ணிக் கொள்ளும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்!?

பொதுவாக  "மெய்" அல்லது "உண்மை" என்பதற்கு "பரந்தாமனே உபேயம் (இலக்கு), அவனே உபாயம் (அடையும் வழிவகை)" என்று பொருள்படும்.  "மெய்ந் நா மனத்தால்", "மெய்ந் நான் எய்தி" என்று ஆழ்வாரின் சொற்சித்தும் ரசிக்கத் தக்கது :-)

மேவுதல் - அழகான இச்சொல்லை பல பாசுரங்களில் காணலாம். இது 'வெறும் தங்குதல்' இல்லை, (திருவடியில்)"பொருந்தி அமைதல்". இது தவிர இச்சொல்லுக்கு "அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்;" என்று பல பொருள்கள் உண்டு.

ஆக, அர்ச்சாவதார கோல திருவேங்கடப் பெருமாளின்  திருவடிகளில் சரண்  அடைவது, அன்று உலகளந்த   திருவடிகளில் சரண் புகுவதற்கு ஈடானது என்பது ஆழ்வார் திருவாக்கு.  அதாவது, திருமலை ஸ்ரீனிவாசனின் திருவடித் தாமரைகள் அத்தகைய சௌலப்யமும் (எளிமை வாய்ந்த கருணை) சௌசீல்யமும் (பேதம் நோக்காத கருணை) மிக்கவை.

திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

---எ.அ. பாலா 

Tuesday, March 08, 2016

தினம் ஒரு பாசுரம் - 70

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலமெல்லாம்

சீறா எறியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே!

சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!

ஆறா அன்பில் அடியேன்  உன் அடி சேர் வண்ணம் அருளாயே.


--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

பாசுரப் பொருள்:

கொடு வல் அசுரர் குலமெல்லாம் - கொடிய, வலிமை மிக்க அரக்கர்களின் கூட்டங்கள் அனைத்தும்

கூறாய் நீறாய் - பல துண்டுகளாயும், பின் சாம்பலாயும்

நிலனாகிக்  - பின் மண்ணில் (தேய்ந்து அழிந்து) போகும்படிச்  செய்கின்ற 

சீறா எறியும் - சீறி(யும்) அடங்காது பாய்கின்ற

திருநேமி வலவா - திருச்சக்கரத்தை வளைக்கையில் தரித்தவனே

தெய்வக் கோமானே! - கடவுளர்க்கெல்லாம் தலைவனே

சேறார் சுனைத் தாமரை - சேறு நிறைந்த குளங்களில் தாமரை மலர்கள்

செந்தீ மலரும் - நெருப்பைப் போல சிவப்பாகப் பூக்கின்ற

திருவேங்கடத்தானே! - திருமலையில் வாசம் செய்தருளும் எம்பெருமானே

ஆறா அன்பில் அடியேன்  -  (உன் மீது) மாறாத/குறையாத, அளவில்லாத  அன்புடைய அடியவனான நான்

உன் அடி சேர் - உன் திருவடியை வந்து அடைவதற்கு

வண்ணம் அருளாயே - வழி காட்டி அருள் செய்ய வேணும்

பாசுரக்குறிப்புகள்:

திருமாலின் காத்தருளும், கருணை குணத்தைப் போற்றிப் பாடும் ஆழ்வார், அவனது (பகைவரை) அழிக்கும் தன்மையின் தீவிரத்தை சற்று உக்கிரமாகவேச் சொல்கிறார். இப்படியும் சிலபல உக்கிரப் பாசுரங்கள் உண்டு.

இராமாயண  போர்க்களத்தை ஆழ்வார் விவரிப்பதைப் பார்த்தால் சற்று அச்சம் ஏற்படும்!
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே!


திருச்சக்கரத்தை ஒரு நவீன கால ஏவுகணைக்கு ஒப்பாகச் சொல்கிறார் ஆழ்வார். பரமனின் ஆழியானது, பகைவரை வெட்டிச் சாம்பலாக்கி மண்ணோடு மண்ணாக்கி விடும். சில நேரங்களில் காக்கும் தொழிலைச்  செய்ய அழிக்கவும் வேண்டியிருக்கிறதல்லவா? செங்கோல் ஆட்சி புரிய திருச்சக்கரம் தேவையே .... என்று நம் ஆழ்வாரே திருவிருத்தத்தில்  திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்"


பிறிதொரு பாசுரத்தில்
"கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!  கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்!" 
என்று கடல் சூழ்ந்த உலகங்களை காத்து ஆள்வதில் மின்னும் திருச்சக்கரத்தின் பங்கை ஆழ்வார் எடுத்துரைக்கிறார்.

பெரிய திருவந்தாதியில்
"கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்"
என்று ஆழ்வார் அருள்கையில் சக்கரமானது பரமனின் வலக்கையை விட்டு அகல்வதே இல்லை என்று அர்த்தமாகிறது.

இங்கு திருச்சக்கரத்தை நம் தீவினைகளை வேரறுக்கும் தன்மைக்குக் குறியீடாகவும் கொள்ளலாம், அதற்கும் ஆழ்வார் பாசுரமே சான்று :-)
"எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்"

"சீறா எறியும்" - பகையை வேரோடு அழிக்கும் திருச்சக்கரமானது, ஓர் அழித்தலுக்குப்  பின்னும், வன்மை சற்றும் குறையாமல், ஒளிர்ந்து கொண்டு அடுத்த ஏவுதலுக்குத் தயாராக இருக்கிறதாம்! அதுவே "சீறா எறியும்".
"திரு நேமி வலவா" - வலவன் = "வலக்கையில் உடையவன்", "திறமையாளன்".
"வல்லவன்" என்பது மருவி "வலவன்" ஆகியதாகக் கொண்டால் "அழிக்கும் தன்மை மிகுந்திருக்கும் திருவாழியை அடக்கியாள வல்லவனே" என்று ஆழ்வார் புகழ்வதாகக் கொள்ளலாம்.


"தெய்வக்கோமானே" --- சுவாமித்துவத்தின் வெளிப்பாடு. பெரும்பாலான திருவேங்கடமுடையான் பாசுரங்களில் சுவாமித்துவத்தை ஆழ்வார் போற்றியிருப்பதை நோக்குகையில், கலியுக அர்ச்சாவதார வழிபாட்டுக்கு மிக உகந்தவன் திருமலையில் வாசம் புரியும் பெருமாளே என்பதை ஆழ்வார் வாக்காகவே கொள்ளலாம்.

"சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்  உன் அடி சேர் வண்ணம் அருளாயே"


"சேறார் சுனைத் தாமரை" க்கும் "ஆறா அன்பில் அடியேன்"  என்பதற்கும் ஒரு நயமான தொடர்பை உருவாக்கலாம்.  "திருவேங்கடப் பெருமாளே! திருமலையில் உள்ள குளங்களில் நீர் வற்றலாம். ஆனால், உன் மீது எனக்குள்ள பேரன்பானது, என்றும் வற்றாது, மாறாக பெருகிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது. ஆகவே, என் சரணாகதியை ஏற்று உன் கமலத் திருவடி நிழலில் சேர்த்து, தொண்டு செய்ய அருள் புரிய வேணும்"  என்று ஆழ்வார் இறைஞ்சுவதாகக் கொள்வதிலும் ஒரு சுவை இருக்கிறது தானே!

--- எ.அ. பாலா

Monday, March 07, 2016

தினம் ஒரு பாசுரம் - 69

தினம் ஒரு பாசுரம் - 69


அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே,

கொடியா அடு புள் உடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே,

செடியார் வினைகள் தீர்மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே,

நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே


-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

திருவேங்கடவன் திருவடிப் பற்றல் பாசுரங்கள் தொடர்கின்றன.

பொருளுரை:


அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியவனான நான் அணுகி அனுபவிக்கும் அமுதமே

இமையோர் அதிபதியே - வானவர் தலைவனே

கொடியா அடு புள் உடையானே - உன் திருக்கொடியாக (பகையை) அழிக்கும்/பொசுக்கும் கருடனைக் கொண்டவனே 

கோலக் கனிவாய்ப் பெருமானே- அழகிய கனி நிகர் அதரம் உடையவனே 

செடியார் வினைகள் தீர்மருந்தே -  செடி போல (அடர்ந்து வளரும்) பாவங்களை ஒழிக்கும் மருந்தானவனே

திருவேங்கடத்து எம்பெருமானே - திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே

உன் பாதம் காண - உன் திருவடியைக் காண்பதற்காக

நொடியார் பொழுதும் - ஒவ்வொரு  நொடிப்பொழுதும்

நோலாது ஆற்றேனே - நோன்பு எதுவும் மேற்கொள்ளாத நான், பொறுக்க மாட்டாது தவிக்கிறேனே

பாசுரக்குறிப்புகள்:அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - முன் எழுதிய பாசுர இடுகைகளில் ஆழ்வார் அருளிய "சென்று சேர், அமர்ந்து புகுந்தேனே" போன்றதே தான் "மேவி அமர்கின்ற" என்பதும். "மேவுதல்" என்பதற்கு  நேர்ப்பொருள் "தங்குதல்". உள்ளர்த்தமாக  மெய் ஒழுக்கம் சார்ந்த  நன்னெறி / புலனடக்கம் எனலாம். அதைக் கைக்கொண்ட பின்னரே "அமர்தல்" என்ற உள்ளம் (ஆன்மா) சார்ந்த அடிப்பற்றுதல் (சரணாகதித்துவம்).

அமுதம் சாகா வரம் தரும் மருந்து. பெருமாளை அமுதம் என்கையில், அவனைப் பிறப்பறுக்கும் "மருந்தாக", பரமபதத்தை/பேரின்பத்தை அருளுபவன் என்று கொள்வது சரியானதே. இதன் வாயிலாக ஆழ்வார் பரமனின் வாத்சல்ய (பேரன்பு) குணத்தைப் போற்றுவதாகச் சொல்லலாம்.

இமையோர் அதிபதியே - அமுதம் என்றழைத்தவுடன்,  தேவர்கள் நம் ஆழ்வார் மனத்து வர,  "இமையோர் அதிபதியே" என்று திருமாலின் சுவாமித்துவ (இறைத்தலைமை) குணத்தைப் போற்றுகிறார். மேலும், திருநாடான வைகுந்தத்தில் இமையவருக்குக் கிட்டும் இறை அனுபவத்துக்கு ஈடான ஒன்றை  தான் பூவுலக வாழ்விலேயே அனுபவிப்பதை ஆழ்வார் குறிப்பதாகக் கொள்வது ஒரு நயம் சார் கருத்தே.

கொடியா அடு புள் உடையானே - 
"அடு புள்" = (பகையை) அழிக்கும் பறவை (கருடன்)
இதை, ஐம்புலன்கள் சார் சிற்றின்ப ஆசைகளை பொசுக்கும் வல்லமைக்குக் குறியீடாகக் கொள்ளலாம். அத்தகைய வல்லமையுடைய "பெரிய திருவடி" ஆகிய கருடனை எம்பெருமான் ஆனவன் தனது திருக்கொடியாக வைத்திருப்பவன்.

 மற்றொரு பாசுரத்தில் "உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்" என்று தானே ஐம்புலன்களால் பெரும் அவதியுறுவதாக (ஆழ்வார்களில் தலையாய) நம்மாழ்வாரே அருளியிருக்கையில், பொருளாசையே பிரதானமாக இருக்கிற தற்காலச்சூழலில், நாமெல்லாம் எம்மாத்திரம்?!

அதோடு, அக்கருடன் மீதேறி விரைந்து சென்றுத் தானே "ஆதிமூலமே" என்று அலறிய யானைக்கு வரதன் அபயம் அளித்தான்.  ஆக, பரந்தாமனின் "சௌசீல்யம்" (உயர்வு/தாழ்வு பாராமல் காத்தருளும் குணம்) இங்கு வெளிப்பட்டது!

கோலக் கனிவாய்ப் பெருமானே - பல பாசுரங்களில் ஆழ்வார், திருமாலின் திருவாயை தாமரை மலருக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார், அதன் மென்மைக்காகவும், சிவந்த நிறத்திற்காகவும். இங்கு கனியுடன் அதரங்களை ஒப்பிடுவது, பரமனது இனிய, குழைந்த புன்முறுவலை எடுத்துக் காட்டவே. புன்னகையுடன் கூடிய, எளிமைத்தன்மையுடன் அடியவர்க்கு மனம் இரங்கும் கல்யாண குணமான "சௌலப்யத்தை"க் குறிப்பதாகச் சொல்லலாம் தானே!

கண்ணபிரானாக, பாஞ்சாலி, குசேலன், குந்தி, பீஷ்மர், கர்ணன் என்று பலருக்கு சௌலப்யம் காட்டியிருக்கிறான்.  ஆக, முதல் 2 வரிகளில்  பரந்தாமனது 4 முக்கியமான கல்யாண குணங்களையும் ஆழ்வார் உணர்த்தி விடுகிறார்.

செடியார் வினைகள் தீர்மருந்தே - செடி போல அடர்ந்து படர்ந்து வளரும், துன்பம் தரும் வினைகளை ஒழிக்கும் பெரு மருந்து, அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள, திருமலை உறை நாதனே என ஆழ்வார் அறுதியிட்டு அருளுகிறார். பாவங்கள் ஒழிந்தால் தானே பரமபதம் கை கூடும்! (திருமழிசைப்பிரானின் "விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே"  என்ற முன் எழுதிய இடுகையின் பாசுர வரிகளை நினைவு கூர்க)

நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே -  "இப்படி கல்யாண குணங்களைக் காட்டியும், தீவினையைப் போக்க வல்ல மருந்தாகவும் விளங்கும் எம்பிரான் உன் திருவடியைக் காண வேண்டி, நோன்பு எதுவும் மேற்கொள்ளாத அடியேன் ஒவ்வொரு நொடியும் கிடந்து துடிக்கிறேன்" என்று மருகுகிறார் ஆழ்வார்.  இதை வேறு விதமாகவும் நோக்கலாம்: "நான் ஒரு நொடிப் பொழுதும் நோன்பிருக்காமலேயே உன்னைக் காண ஏங்கித் தவிக்கிறேன்".

எப்படி பொருள் கொண்டாலும், இதன் சாரம் ஒன்று தான். நோன்பு இருந்து, பூசைகள் செய்து வாழும் அடியார்களின் ஆற்றாமைக்கு சற்றும் குறைந்ததல்ல தனது ஆற்றாமை என்று ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார். இதில் நம்பிக்கை தரும் அருட்செய்தியும் உள்ளது. "ஞான அனுட்டானங்கள் முக்கியமில்லை. அவனை அடைய பரமபக்தி ஒன்றே போதும். அம்மாயவனைக் கட்டி இழுக்க, பக்தி யோகமானது ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது" என்பதை ஆழ்வார் வாக்காக நாம் கொள்வோம்.

திருவேங்கடவன் திருவடிகளே சரணம்!

---எ.அ. பாலா

Friday, March 04, 2016

தினம் ஒரு பாசுரம் - 68

தினம் ஒரு பாசுரம் - 68


புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,
திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?


(திருவாய்மொழி - 6.10.5) - நம்மாழ்வார்

இன்று ஒரு ராம-கிருஷ்ண பாசுரம். ஆழ்வார் திருவேங்கடமுடையானை ராமனாகவும், கண்ணனாகவும் பாவித்து, அனுபவித்து எழுதிய ஓர் அற்புதமான திருப்பாசுரம். ஸ்ரீராமனாகவும், கோகுல கிருஷ்ணனாகவும் பூவுலகில் அவதாரம் செய்த திருமால் தான், கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் திருமலை ஸ்ரீநிவாசனாக அருள் பாலிக்கிறான் என்பது ஆழ்வார் தரும் அருட்செய்தியாம்.

மூல வேங்கடவன் திருத்தோள்களில் அம்புறாத் தூணி கட்டிய  அடையாளமும், நாணேற்றிய தோள் தழும்பும் இருக்கின்றன.  அவன்  திருவயிற்றுப் பகுதியில்  உரலில் கட்டப்பட்ட  தாம்புக் கயிற்றுத் தழும்புகளைக் (அதனால் தான் அவன் தாமோதரன் = தாமம் + உதரன்) காணலாம். ஆக, திருமலை உறை  எம்பெருமானே சீதாவின் ராமன், அவனே யசோதாவின் கிருஷ்ணன்!

பொருளுரை:


புணரா நின்ற மரம் ஏழ் -  தனித்தனியாக (ஒரு நேர்க்கோட்டில்)  நின்ற ஏழு மரங்களை  (துளைத்துச்செல்லும் வண்ணம்)
அன்று  - அன்றொரு காலத்தில் (இராமாவதாரத்தில்)
எய்த ஒரு வில் வலவாவோ - அம்பெய்த திறமையான வில்லாளனே !
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் - பிணைந்து  (இரட்டை மருத மரமாக) நின்ற இரு மரங்களுக்கு
நடுவே போன முதல்வாவோ - இடையே (உரலை  இழுத்தபடி நடந்து) சென்ற ஆதி முதல் நாயகனே !
திணர் ஆர் மேகம் எனக் - (நீருண்ட) கனம் மிக்க மேகங்களை ஒத்த 
களிறு சேரும் திருவேங்கடத்தானே - (கருமையான) யானைகள் சேர்ந்து திரியும் திருமலையில்  எழுந்தருளிய அண்ணலே !
திணர் ஆர் சார்ங்கத்து - வலிமை மிக்க ஸ்ரீசார்ங்கம் எனும் வில்லைத் தாங்கிய (எம்பிரானான)
உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே? - உனது திருவடிகளை அடியேன் அணுகிப் பற்றுவது என்றைக்கோ?

 

பாசுரக்குறிப்புகள்:


புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,


 இராமனின் விற்திறமை, வாலியை வெல்வதற்குரிய வலிமை ஆகியவை பற்றிய சுக்கிரீவனின் ஐயத்தைப் போக்க, அந்த ராகவன் ஒரே அம்பை எய்து ஏழு மராமரங்களைத் துளைத்துச் செல்லும்படி செய்து காட்டிய நிகழ்வை ஆழ்வார் எடுத்தாள்வதில் ஒரு சூட்சமம் உள்ளது :-) "சுக்கிரீவன் ஆனவன் உனது குணபெருமைகளை, ஆற்றலை அறியாதவனாய் உன் மேலேயே  சந்தேகம் கொண்டான்.  அதைப் பெரிதாக எண்ணாமல் அந்த சந்தேகத்தையும் தீர்த்து வைத்த, பெருந்தன்மையும், எளிமையும் மிக்கவன் நீ.   உன் பரம அடியவன் ஆன நானோ, துளிச் சந்தேகமும் இன்றி , நீ மட்டுமே கதி என்று நம்பி வந்தவன். எனக்கு மனம் இரங்கலாகாதா?" என்று நம் ஆழ்வார் உள்ளர்த்தமாகச் சொல்வதாகக் கொள்வதில் தான் எத்தனை சுவை !!!

 புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,

அடுத்து ஆழ்வார் கிருஷ்ண அவதார நிகழ்வைச் சுட்டுகிறார். யசோதாவின் சின்னக்கண்ணன் இரட்டை மரங்களுக்கு  இடையே உரலுடன் ஓடி
("பணமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்,
இணைமருதிற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே
"
என்ற திருமங்கை மன்னனின் பாசுர வரிகளை நினைவு கூர்க!)
அவை பெயர்ந்து விழுந்ததால், அதுவரை மரங்களாக இருந்த, நாரதரால் சபிக்கப்பட்ட குபேரனின் புதல்வர்கள் சாப விமோசனம் பெற்றனர். அதாவது, எப்படி, எப்போது ஒருவரின் தீவினையை, சாபத்தைப் போக்கி ரட்சிக்க வேண்டும் என்று அந்த மாயனுக்குத் தெரியும் என்பதை ஆழ்வார் குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்வது தகும்.

முதல்வா - பரந்தாமனே "ஊழி முதல்வன், தனியொரு வித்து, பரம்பொருள், முத்திக்கும் வித்து" என்று உணர்க.

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,

இங்கு திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகத்தில், திருமூழிக்களத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்த பாசுர வரிகளைப் பார்ப்போம்.
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலதாயினாய் இமையோர்க்கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலானாயே.

திருமாலே களிறு போன்றவன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். தென் திருமாலிருஞ்சோலை மலையிலும், வட வேங்கடத்திலும்,  குட(மேற்கில்)  திருவரங்கத்திலும், குண(கிழக்கில்) திருக்கண்ணபுரத்திலும் என்று நான்கு திசைத் திருத்தலங்களிலும்  நின்றும், கிடந்தும் அருள் பாலிப்பவனை நான்கு (வலிமை, பெருமை மிகு) யானைகளாக ஆழ்வார்  பார்க்கிறார்.

திணரார் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?

ஆழ்வார் உணர்த்துவது: "உன் கையில் சார்ங்கத்தைக் கண்டவுடன் எனக்கு பரமபதம் கிட்டுவது குறித்த பயம் முழுதும் விலகி விட்டது. அதற்கான தடைகளை நீ உடைத்தெறிவாய் என்ற நம்பிக்கையும் மிகுந்து இருக்கிறது.  ஆனால், அது கை கூடி வரும் நாளைச் சொல்லல் ஆகாதா?"  ---- இப்படிக் கொள்வதில் சுவை இருக்கிறது தானே!

"புணர்" என்பதற்கு "சேர்" என்பதோடு  "புதுமை, சமீபம்" என்ற பொருள்களும் உண்டு.
காதலித்தவளைக் கூட நேராமையால் தலைவன் தனித்துறைந்து வருந்துதலைக் கூறும் புறத்துறைக்கு   "புணராவிரக்கம்" என்று பெயர்.

வலவன் = திறமையுடையவன்; வெற்றியாளன்; தேர்ப்பாகன்; திருமால்; வலப்பக்கத்து உள்ளவன்; ஓர் அசுரன்

"திணர்" என்பதற்கு செறிவு, மிகுதி. நெருக்கம், அடர்த்தி, வலிமை; உறுதி,  பருமன், கனம்  என்று பல பொருள்கள்.

"ஆர்" என்ற இரண்டெழுத்துச் சொல்லுக்கு இத்தனை பொருள்கள் உள்ளன. நம் தமிழ் தான் எத்தனை பெருமைக்குரியது!
நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின் அகத்தில் செறிகதிர்;அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப் பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

---எ.அ.பாலா

Thursday, March 03, 2016

தினம் ஒரு பாசுரம் - 67

தினம் ஒரு பாசுரம் - 67

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே.


(திருவாய்மொழி - 6.10.1) - நம்மாழ்வார் 


முந்தைய பாசுர இடுகை "செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே" எழுதிய கையோடு, திருமலைக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு (எதிர்பாராமல்) கிடைத்தது.  தெரிந்த ஒருவர் வாயிலாக ஸ்பெஷல் தரிசனம் :-) நன்றி தெரிவித்து, இன்று இன்னுமொரு திருவேங்கடமுடையான் அடிப்பற்றல் பாசுரம்!
பாசுரப்பொருள்:

உலகம் உண்ட பெருவாயா ! - (பிரளய காலத்தில்) பூவுலகை விழுங்கி (திருவயிற்றில் வைத்துக்) காத்த அகண்ட வாயனே
உலப்பில் கீர்த்தி அம்மானே ! - நிகரில்லாத புகழ்/பெருமை வாய்ந்த இறையவனே 
நிலவும் சுடர் சூழ் - மாறாத/மங்காத பிரகாசம் கொண்ட
ஒளிமூர்த்தி ! -  சோதி வடிவானவனே
நெடியாய் ! - (வடிவத்திலும், குணபெருமைகளிலும்) உயர்ந்து நிற்பவனே
அடியேன் ஆருயிரே ! - என் உயிருக்கு ஒப்பானவனே
திலதம் உலகுக்காய் நின்ற - உலகுக்கு ஒரு திலகம் போல வாய்த்திருக்கும்
திருவேங்கடத்து எம்பெருமானே ! - திருவேங்கடமலையில் நின்று அருளும் அண்ணலே
குலதொல் அடியேன்- பல தலைமுறைகளாக உனக்குத் தொண்டு செய்யும் குலத்தில் பிறந்த நான்
 உன பாதம் கூடும் - உனது திருவடிகளை வந்தடையும்
ஆறு கூறாயே - வழிவகையை உரைப்பாயாக

பாசுரக்குறிப்புகள்:

உலகம் உண்ட பெருவாயா - பிரளயத்தின்போது பூவுலகை திருமால் விழுங்கி தன்  பொன் வயிற்றில் வைத்துக் காத்த நிகழ்வை ஆழ்வார் சுட்டியதில் சாரம் இருக்கிறது.  நல்லவர், தீயவர், அறிவில் சிறந்தவர்/ குறைந்தவர், செல்வந்தர், ஏழை, இன்னும் பலப்பல உயிரினங்கள் என்று அனைவரின் /அனைத்தின் மீதும் கருணை கொண்டு ரட்சித்த பரமன் ஆனவன், அடியார்களை  ஒருபோதும் கை விட மாட்டான்  என்ற  நம்பிக்கை தரும் செய்தியை , பூவுலகை உண்ட நிகழ்வைச் சுட்டி,  ஆழ்வார்   குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்வது பொருத்தமான ஒன்றே.

நிலவும் (ETERNAL) சுடர் சூழ் ஒளிமூர்த்தி - பரமனின் திருமேனி ஒளிவடிவம் என்பது நேரடிப்பொருளாக இருந்தாலும், ஒளி என்பது ஞானத்தையும் குறிக்கிறது. அவன் ஞான வடிவானவன் (icon of effulgent knowledge), அவனைப் பற்றினாலே அறியாமை இருள் அகலும் என்று கொள்ள வேண்டும். அதுவே உய்வுக்கு முதல் படி.

நெடியாய் - ஆதியும் அந்தமும் இல்லாது உயர்ந்து பெருகி நிற்பவன் (All Pervading) எனும்போது, அவனே பரம்பொருள் என்று தெளியலாம்.

அடியேன் ஆருயிரே - தன் ஆன்மாவில் அந்தப் பரந்தாமன் கலந்து விட்டதாக ஆழ்வார் அருளுவது அத்வைதக் கோட்பாடு போலத் தோன்றினாலும், "ஆன்மாவை ஆள்பவன்" (Soul's Master) என்பதே சரியானது.  திருமால் ஆனவன் தனது வடிவழகையும், கல்யாண குணங்களையும் காட்டிக் காட்டியே ஆழ்வாரை மறுக  வைத்தான் என்பது புலப்படுகிறது :-)

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து -  பூமிப்பிராட்டிக்கு அழகிய ஆபரணம் போல விளங்குவது திருமலையாகிய திவ்விய தேசம் என்பதால் தான் அது "திலதம் உலகுக்காய் நின்ற"து. அதனால் தான், ஸ்ரீநிவாசன் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமும் கூட.

குலதொல் அடியேன் = குலம் + தொல் + அடியேன் .... குலப்பழமையாக அடிமை (தொண்டு) செய்பவன். இங்கு பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டில் வரும் "அபிமான துங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்" என்ற பாசுர வரியை நினைவு கூர்கையில், ஆழ்வார்கள், தாங்கள் மட்டுமல்லாமல், தங்கள் தலைமுறை முன்னோர்களும் சீரிய வைணவ அடியாராக இருந்ததைக் குறிக்கவே "தொல்லடியேன், பழவடியேன்" என்ற சொல்லாட்சியை பாசுரங்களில் பயன்படுத்தினர் என புரிந்து கொள்ளலாம்.

உன பாதம் கூடும் ஆறு கூறாயே - மேலே சொன்னபடி, "குல பரம்பரையாக தொண்டு செய்து வரும் என்னை  நீ நோக்காவிடில் வேறு எவர் நோக்கி ரட்சித்து உய்வளிக்க (திருவடி நிழல் தர) முடியும்"  என்று உரிமையோடு நம் ஆழ்வார் பெருமாளைக் கேட்கிறார்.  ஆக இவ்விஷயத்தில் பரமனுக்கென்று தனியாக தெரிவு என்பது கிடையாது, ஆழ்வார் கேட்பதே அவனது விருப்பத்தேர்வும் :-))) 

--- எ.அ. பாலா  

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails